மின்சாரத்திற்கு விடுமுறை விட்ட ஒரே மாநிலம் தமிழகம் தான்: அ.இ.அ.தி.மு.க. குற்றச்சாற்று!
வியாழன், 27 மார்ச் 2008 (17:40 IST)
''மின்சாரத்திற்கு விடுமுறை விட்ட ஒரே மாநிலம் தமிழகம்தான்'' என்று தமிழக சட்டப்பேரவையில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கம் குற்றம் சாற்றினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று 2-வது நாளாக நடந்தது. இதில் அவர் பேசுகையில், "தமிழகத்தில் 9 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட தேயிலை தொழிற்சாலையை நவீனப்படுத்த கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தீர்கள் அது என்ன ஆனது. எது எதற்கெல்லாமோ விடுமுறை விடுகிறார்கள். மின்சாரத்திற்கு விடுமுறை விட்ட ஒரே மாநிலம் தமிழகம்தான்" என்றார்.
அப்போது, அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு, "அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்சார தேவை குறைவாக இருந்தது. தற்போது, ஒரு நாளைக்கு 17 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. நிறைய புதிய தொழிற்சாலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இரவு நேரங்களில் மாணவ- மாணவிகளின் படிப்பு கெடக்கூடாது என்பதற்காக மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை ஒரு இடத்தில் கூட மின் தடை ஏற்படக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்றார்.