முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத்திற்கு மு.க.அழகிரி கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவரான, மு.க.அழகிரியை எப்படியாவது தில்லுமுல்லு வேலைகள் செய்து தப்பிக்க வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.
இந்த வழக்கின் முக்கிய அரசுத் தரப்பு சாட்சியான திருமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.முத்துராமலிங்கம் ஏப்ரல் ஆம் தேதி சித்தூர் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்க உள்ளார். அவரை மிரட்டும் விதமாக அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வருகிறார் மு.க.அழகிரி.
அழகிரி மடியில் கனம் இருப்பதால் தான் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்திச் சாட்சியைக் கலைக்க முற்படுகிறார். இதற்கு முதலமைச்சர் கருணாநிதியும் உடந்தையாக இருக்கிறார்.
முத்துராமலிங்கத்திற்கோ அவரது குடும்பத்திற்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் அவருக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்காத முதலமைச்சர் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு மேலும் ஏதாவது சட்ட விரோத நடவடிக்கையில் தி.மு.க அரசு இறங்குமேயானால் இந்தப் பிரச்சனையை சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல அ.இ.அ.தி.மு.க தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.