மே 14ஆ‌ம் தேதி வரை சட்ட‌ப்பேரவை: அவை‌த் தலைவ‌ர்!

வியாழன், 27 மார்ச் 2008 (09:49 IST)
''மே மாதம் 14ஆ‌ம் தேதி வரை சட்ட‌ப் பேரவை கூட்டம் நடக்கிறது'' என்று அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் கூறினார்.

செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கலந்து பேசி, இந்த சட்ட‌ப் பேரவை கூட்டத்தொடரை மே 14ஆ‌ம் தேதி வரை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த 3 நாள் கூட்டத்தையும் சேர்த்து, மொத்தம் 34 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

பட்ஜெட் மீதான பொது விவாதம் 27, 28, 31, ஏப்ரல் 1, 2 ஆகிய நாட்கள் நடக்கிறது. ஏப்ரல் 2ஆ‌ம் தேதி விவாதமும் முதலமைச்சர் பதிலுரையும் நடக்கிறது. 3ஆ‌ம் தேதியில் இருந்து மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது.

ஏ‌ப்ர‌ல் 14ஆ‌ம் தேதி பிற்பகல் அரசினர் சட்டமுன்வடிவுகள்-ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்படும்.

மன்ற கூட்டம் அமைதியாக நடைபெற ஏதுவாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, ஒருசிலவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறோம். நேரடி ஒளிபரப்பு செய்தால் எப்படி நீக்க முடியும். எனவே அதைப் பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை, பரிசீலிப்போம் எ‌ன்று அவ‌ை‌த் தலைவ‌ர் ப‌தி‌ல் அ‌ளி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்