தமிழகத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய நிபுணர்குழு வருகிறது!

புதன், 26 மார்ச் 2008 (11:05 IST)
மழை, வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக மத்திய நிபுணர் குழு தமிழ்நாட்டுக்கு வருகிறது.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்ததால் ஏராளமான ஏக்கர் நிலங்களில் நெல், வாழை, உளுந்து போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின.

மழையினால் 25-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆனார்கள். பல இடங்களில் கால்நடைகளும் உயிர் இழந்தன. எதிர்பாராத வகையில் பெய்த இந்த திடீர் மழையால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மழை, வெள்ள பாதிப்புகள் பற்றி தமிழக அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு ஏற்கனவே பொதுவாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசின் வெள்ள பாதிப்பு தொகுப்பு அறிக்கை மத்திய அரசின் கைக்கு கிடைத்ததும், மழை வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய நிபுணர் குழு உடனடியாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

அந்த குழுவினர், சென்னைக்கு வந்து தமிழக உயர் அதிகாரிகளுடன் விவாதிப்பார்கள். அதன்பிறகு அவர்கள், சென்னையில் இருந்து பல குழுக்களாக பிரிந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிடுவார்கள்.

பின்னர், அவர்கள் தங்கள் மதிப்பீடுகளை தொகுத்துக் கொண்டு சென்னை வந்து தமிழக அதிகாரிகளுடன் அது பற்றி விவாதித்து விட்டு டெல்லி திரும்புவார்கள். அதன்பிறகு அந்த குழுவினர் தங்கள் அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வார்கள். மத்திய அரசு அதை பரிசீலித்து, மழை, வெள்ள நிவாரணத்துக்காக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி உதவி அளிப்பது என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்