இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கை கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அறுவடைக்கு பிறகு கஷ்டத்தை ஓரளவுக்கு போக்கலாம் என்று எண்ணி இருந்த விவசாயிகள் மீது விழுந்த இடியாக இந்த கோடை மழை அமைந்து விட்டது.
தமிழக அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை யானை பசிக்கு சோளப் பொரியாகவே உள்ளது. அதுவும் இழப்பீடு சிறு விவசாயிகளுக்கு மட்டும் தான் என்று அறிவித்து இருப்பது வேதனைக்குரியது. பாசன பகுதியில் 1 ஏக்கருக்கு ரூ.1,600 தான் கிடைக்கும். 1 ஏக்கர் விவசாயம் செய்ய ரூ.10 ஆயிரம். மானாவாரியில் 1 ஏக்கருக்கு கிடைப்பது ரூ.1000 மட்டுமே. ஆனால் பயிர் செலவு ரூ.7 ஆயிரம் வரை ஆகும்.
எனவே நெல், வாழை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்கடன் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். இடிந்த குடிசைகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும். இழப்பீட்டு தொகையை உயர்த்துவதுடன் பாரபட்சம் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.