ஏப்.1 முதல் புதுச்சேரியில் தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம்!
செவ்வாய், 25 மார்ச் 2008 (15:53 IST)
''தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் புதுச்சேரியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும்'' என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் போபீந்தர் சிங் தனது உரையில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் இடை நிற்றல் ஜீரோ சதவிகிதமாக உள்ளது. இடைநிலை கல்வியிலும் இதனை எட்ட முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சுருக்க வேளாண்மையில் புதிய தொழில்நுட்ப திட்டத்தை செயல் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் நலனுக்காகவும், நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்கவும், 7 இடங்களில் ஏற்கனவே தடுப்பணைகள் கட்டப் பட்டுள்ளன. 6 தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 16 தடுப்பணைகள் கட்டப்படும்.
செயல் திறன் சாராத, வேலையை செய்ய விருப்பமுள்ள உரிய வயத டைந்த குடும்ப உறுப்பினர்களை கொண்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் ஒரு நிதியாண்டின் உறுதியாக 100 நாட்கள் உத்தரவாத ஊதியம் அளிக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் புதுச்சேரியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும்.
காரைக்காலிலிருந்து நாகூர் வரையில் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பெரிய போயிங் வகை விமானங்கள் வந்து செல்லும் வகையில் புதுச்சேரி விமான நிலையத்தை விரிவுப்படுத்த நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காரைக்காலிலும் பசுமை விமான தளம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் காரைக்கால் துறைமுகம் மூன்று கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.