திருச்சியில் இருந்து பெங்களூருக்கு இரயில் விட கோரிக்கை!

திங்கள், 24 மார்ச் 2008 (15:55 IST)
திருச்சி, மதுரையில் இருந்து தினசரி பெங்களூருக்கு புதிதாக இரயில் இயக்க வேண்டும் என்று சேவை அமைப்புகளின் கூட்டமைப்பு கோரியுள்ளது.

இது தொடர்பாக இரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்திற்கு, திருச்சி சேவை அமைப்புகளின் அமைப்பாளர் எம் சேகரன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திருச்சி மற்றும் மதுரையில் இருந்து பெங்களூருக்கு பயணிகள் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தினசரி இரவில் தூங்கும் வசதியுடன் இரு நகரங்களில் இருந்தும் பெங்களூருக்கு இரயில் இயக்க வேண்டும்.

திருச்சியில் இருந்து பல வருடங்களாக பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த இரயில், மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அதிக பயணிகள் பெங்களூருக்கு செல்கின்றனர். இதனால் இடம் கிடைப்பது கஷ்டமாக உள்ளது.

திருச்சியில் இருந்து இயக்கப்படும் புதிய இரயில் ஈரோடு வழியாகவோ அல்லது விருத்தாச்சலம்-சேலம் வழியாக இயக்கலாம்.

திருச்சியில் இருந்து முன்பு அகமதாபாத்திற்கு விரைவு இரயி்ல் இயக்கப்பட்டது. இது எவ்வித காரணமும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இரயிலையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று சேகரன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்