கடந்த 2 வாரமாக தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் நெல், வாழை பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையாக பாதிப்பட்டுள்ள இந்த பகுதிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்தார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இன்று நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கருங்காடு பகுதியில் வெள்ளத்தால் சேதமான நெற்பயிர்களை பார்வையிட்டார். அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் வீடுகளை இழந்த பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, சேர்மாதேவி, கீழகருவேலன்குளம், நாங்குநேரி போன்ற பகுதி களையும் பார்வையிட்டார்.
வெள்ள சேதங்களை பார்வையிட வந்த அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏராளமான மக்கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் கிடைக்க செய்வதாக அவர்களிடம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, நெல்லை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.