சாலை ‌வி‌திகளை ‌மீறுபவ‌ர்க‌ள் ‌மீது கடு‌ம் நடவடி‌க்கை: முத‌ல்வ‌ர்!

வியாழன், 20 மார்ச் 2008 (09:17 IST)
''தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க, சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்று காவ‌ல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம், குற்ற நிகழ்வுகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், பொதுத்துறைச் செயலாளர், காவ‌ல்துறை தலைமை இய‌‌க்குன‌ர், கூடுதல் காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் (சட்டம் மற்றும் ஒழுங்கு), கூடுதல் டி.ஜி.பி. (குற்றப்புலனாய்வுத் துறை), சென்னை மாநகர ஆணைய‌ர், கூடுதல் டி.ஜி.பி. (நுண்ணறிவு), ஐ.ஜி. (நுண்ணறிவு), மண்டல காவல் துறைத் தலைவர்கள் மற்றும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர்க‌ள் கலந்து கொண்டனர்.

மாநிலத்தில் தற்போதுள்ள சட்டம்-ஒழுங்கு சம்பந்தமான அமைதியான நிலைமை தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கருணாநிதி அனைத்து காவ‌ல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதே போல், சாலை விபத்துகளைக் குறைக்க, சாலை விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், குற்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார் எ‌‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்