பொடா வழக்கில் பழ.நெடுமாறன் கூறியுள்ள கருத்துகளுக்குப் பதிலளித்துள்ள முதல்வர் கருணாநிதி ''தூங்குபவரைத் தான் எழுப்ப முடியும், தூங்குவதைப் போல நடிப்பவரை எப்படி எழுப்ப முடியும். விதண்டாவாதம் பேசுவதென்றே முடிவெடுத்து விட்டால் அதற்கு வைத்தியம் ஏது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி- பதில் அறிக்கையில், மாநிலங்கவைத் தேர்தலில் இந்துக்களுக்கு தி.மு.க. அல்வா கொடுக்கப்பட்டு விட்டதாக ஒரு நாளிதழில் ஒருவர் எழுதியிருக்கிறாரே?
கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற போது திருச்சி சிவா, கனிமொழி ஆகிய 2 இந்துக்களை தானே நிறுத்தினோம். அப்போது இந்த "பிரகஸ்பதி'' என்ன சொல்கிறது. இவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டு ஒரு சில பத்திரிகைகள் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.
சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் இடியாப்ப சிக்கலில் உள்ளது என்று செய்தி வந்திருக்கிறதே? எந்தவொரு திட்டத்தைத் தொடங்கினாலும், அதற்கு முட்டுக்கட்டைகள் ஏதோ ஒரு வழியில் வரத் தான் செய்கின்றன. ஆனால் இந்தச் செய்தியிலே எள்ளளவும் உண்மையில்லை. ஒரு சில நில உரிமையாளர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று சுலபமாக தடையாணை பெற்று விடுகிறார்கள். அதுதான் தாமதத்திற்கான உண்மைக் காரணமே தவிர தனிப்பட்ட யாருக்காகவும் இந்தத் திட்டம் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கவில்லை.
அ.இ.அ.தி.மு.க.வில் இருந்த வழக்கறிஞர் ஜோதி செய்தியாளர்களை சந்திக்க சென்னை பிரஸ் கிளப்பிற்கு வந்த போது, அ.இ.அ.தி.மு.க.வினர் சிலர் அவரைத் தாக்க முயற் சித்திருக்கிறார்களே?
அ.இ.அ.தி.மு.க.வின் கலாச்சாரமே அதுதான். மத்திய தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன், சுப்பிர மணியம் சுவாமி, தமிழகத்தின் கவர்னராக இருந்த சென்னா ரெட்டி, வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, ஆடிட்டர் ராஜசேகரன் ஏன் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரே தாக்கப்பட்ட வரலாறெல்லாம் தமிழகம் அறிந்த உண்மையாகும். அந்த வரிசை யில்தான் தற்போது வழக்கறிஞர் ஜோதி இடம் பெற்றுள்ளார்.
பொடா வழக்குகள் தொடர்பாக பழ.நெடுமாறனின் அறிக்கை நீங்கள் ஏதோ உண்மையை மறைக்க முயல்வதாக மீண்டும் அவர் அறிக்கை விடுத்துள்ளாரே?
தூங்குபவரைத் தான் எழுப்ப முடியும், தூங்குவதைப் போல நடிப்ப வரை எப்படி எழுப்ப முடியும். விதண்டாவாதம் பேசுவதென்றே முடிவெடுத்து விட்டால் அதற்கு வைத்தியம் ஏது? பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய நான் பாடுபட்டேனா இல்லையா என்பது நன்றி என்ற ஒரு வார்த்தைக்கு ஓரளவு பொருள் புரிந்தவர்களுக்குத் தான் தெரியும்.
நெடுமாறன் அதிக அளவிற்கு நன்றியைப் புரிந்தவர் என்பதால் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. உண்மையை மறைத்து விட முடியாது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஆம் மறைக்க முடியாதது தான். உண்மை உலகத்திற்குத் தெரியும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.