இரு மாநில உறவை எடியூரப்பா கெடுக்க நினைக்கிறார்: கிருஷ்ணசாமி!
செவ்வாய், 18 மார்ச் 2008 (14:39 IST)
''கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த எடியூரப்பா அமைதியாக உள்ள இரு மாநிலங்களின் உறவை கெடுப்பது மட்டுமல்ல, இந்திய ஒற்றுமை ஒருமைப்பாட்டையே சீர் குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளார்'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாற்றியுள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீருக்கான திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிற ஓகேனக்கல் பகுதி கர்நாடகாவிற்குச் சொந்தமானது, என்று கூறி தமிழக - கர்நாடக மாநிலங்களுக்கிடையே பகை உணர்வையும், பதற்றத்தையும் உருவாக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கடந்த 2005-ஆம் ஆண்டு இது போன்றதொரு தவறான கருத்தைப் பரப்ப முயற்சி நடந்த போது தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கர்நாடக அதிகாரிகள் ஒன்றிணைந்து இருமாநில எல்லை வரைபடத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தி, ஓகேனக்கல் பகுதி தமிழகத் திற்குத் தான் சொந்தமானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த எடியூரப்பா அமைதியாக உள்ள இரு மாநிலங்களின் உறவை கெடுப்பது மட்டுமல்ல, இந்திய ஒற்றுமை ஒருமைப்பாட்டையே சீர் குலைக்கும் வேலையில் இறங்கியுள்ளார். அதோடு லட்சக்கணக்கான தமிழக மக்களுக்கான குடிநீர் பிரச்சினை தீர்வுக்கு எதிராகவும் சதிசெய்து வரும் அவரது செயலை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இரு மாநிலங்களின் அமைதிக்காக உறவை பேணிக்காக்க அவர் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.