தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ!
செவ்வாய், 18 மார்ச் 2008 (13:41 IST)
''தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையிலிருந்து இந்திய அரசு தவறி இருப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கை அரசை எச்சரிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை. ஆனால் இந்திய கடற்படை அதிகாரிகள் இலங்கை கடற்படையின் தவறான தகவல்களையும்,பொய்யான அறிக்கைகளையும் ஆமோதித்து அடிக்கடி செய்தி வெளியிடுகிறார்கள்.
நமது மீனவர்கள் மீது நடந்த பெரும்பாலான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சர்வதேச நீர்பரப்பில் நடைபெற்றவையே தவிர, இலங்கை நீர்பரப்புப்பகுதியில் நடந்தவை அல்ல. கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி அந்த இடத்தில் மீன் பிடிக்க நமது மீனவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. இந்திய மீனவர்கள் கவனக் குறைவால் இலங்கை நீர்பரப்புக்கு உள்ளே சென்று விட்டாலும் அவர்களை சுட்டுக் கொல்ல இலங்கை கடற்படைக்கு என்ன உரிமை இருக்கிறது.
தமிழக மீனவர்களை பாதுகாக்கும் கடமையிலிருந்து இந்திய அரசு தவறி இருப்பது தமிழர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இலங்கைக்கு ராணுவ உதவி கூடாது
ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு தனது தாக்குதல்களை தொடருவதற்கு உதவியாக இந்திய அரசு அவர்களுக்கு ரேடார்களையும், ராணுவ தளவாட பொருட்களையும் வழங்கி உள்ளது.
இந்திய அரசாங்கத்தின் செயல்பாடு, அணுகுமுறை அனைத்தும் இலங்கை அரசின் இனவெறித் தாக்குதலுக்குப் பேருதவியாக இருக்கிறது என்ற எண்ணம் தமிழர்கள் மனதிலே துன்பத்தையும் ஏமாற்றத்தையும் நம்பிக்கை இன்மையையும் விதைத்து வருகிறது.
இலங்கைக்கு இந்திய அரசு அளித்த ரேடார்களைத் திரும்பப் பெற வேண்டும். இலங்கை அரசுக்கு செய்யும் எந்தவிதமான ராணுவ உதவியையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.