தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 8ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் வழக்கறிஞர் ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, அ.தி.மு.க சார்பில் பாலகங்கா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெயந்தி நடராஜனும் இன்று பகல் 12 மணிக்கு தங்கள் வேட்புமனுக்களை தலைமை செயலகத்தில் தேர்தல் அதிகாரியான மா.செல்வராஜிடம் செய்தனர்.
வேட்புமனு தாக்கலின் போது முதலமைச்சர் கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.