சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வங்கிக் கடனை உடனடியாக மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு, வங்கிகள் மூலமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகளில் தொய்வு ஏற்பட்டு, தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டதாக தெரிகிறது.
எனது ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட தொகை செலவழிக்கப்படாமல் மீனவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கிகள் மூலம் வழங்கப்படும் தொகையை தி.மு.க அரசு கண்காணிப்பதாகத் தெரியவில்லை. மத்திய அரசும் இதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
தி.மு.க ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்த மத்திய அரசு, அதே கருணையை மீனவர்களிடம் காட்டி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வங்கிக் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், கடன் வழங்காத மீனவர்களுக்கு முழுத் தொகையையும் மானியமாக வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.