சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவர் கடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரிகா ஷாவுக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு நீதிமன்றம், குற்றவாளிகள் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2001ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்கிறேன்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரசு கற்றுக் கொடுக்க வேண்டும். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பாடத் திட்டங்களை கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.