மகளிர் குழுக்களின் கடன் தொகை அதிகரிக்க பரிசீலனை: மு.க.ஸ்டாலின்!
வெள்ளி, 14 மார்ச் 2008 (11:35 IST)
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவித் தொகையை அதிகரிக்க மத்திய அரசுடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்ட அரங்குகள் திறப்பு மற்றும் சுழல் நிதி வழங்கும் விழா சென்னை ராயபுரத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னையில் 600 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.1.50 கோடிக்கான கடனுதவி வழங்கப்பட்டுள்ளன.
மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் 7,721 குழுக்களுக்கு ரூ.7.72 கோடி அரசு கடனுதவி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. கடன்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் முறையாகச் செலுத்துகின்றனர். அதனால் அவர்களுக்கு வங்கிகள் அதிகளவில் கடனுதவி அளிக்கின்றனர். இத்தொகையை அதிகரிக்க மத்திய நிதி அமைச்சருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.