நிலம் ஆக்கிரமிப்பு: விஜயகாந்துக்கு அரசு இறுதி தாக்கீது!
வெள்ளி, 14 மார்ச் 2008 (10:46 IST)
அரசு நிலம் 28 ஏக்கர் ஆக்கிரமிப்புடன், பண்ணை அமைத்தது பற்றி விளக்கம் கேட்டு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு அரசின் இறுதி தாக்கீது வழங்கப்பட்டது.
மதுராந்தகம் அருகே அங்குணம் தேவாதூர் செல்லும் சாலையில் சுமார் 402 ஏக்கர் நிலத்தில் "கேப்டன் பண்ணை'' என்ற பெயரில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு சொந்தமான பண்ணை இருக்கிறது. இங்குள்ள ஓடை புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு, புஞ்சை மற்றும் நஞ்சை தரிசு நிலங்கள், கோவில் நிலம் போன்ற சுமார் 28 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.
அரசு நிலத்தை மீட்க கோரி, தேவாதூர், விளாகம், முருகச்சேரி, காவாதூர், முள்ளி ஆகிய கிராம மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், விஜயகாந்துக்கு தாக்கீது அனுப்பியது. அதில், "மார்ச் 13ஆம் தேதி தாசில்தார் நடராஜன் முன், விஜயகாந்த் ஆஜராக வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து விஜயகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் ஆபத்சகாயம், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நடராஜன் முன் நேற்று ஆஜரானார். அப்போது தாக்கீதுக்கு பதில் அளிக்க அவகாசம் கேட்டதாக தெரிகிறது.
கால அவகாசம் கொடுக்க இயலாது என்று மறுத்த தாசில்தார், இறுதி கட்ட தாக்கீதான அரசின் 6-ம் நம்பர் தாக்கீதை வழக்கறிஞரிடம் வழங்கினார். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அரசு எந்த நேரமும் அகற்றும் என்பது அந்த தாக்கீதாகும்.