மா‌நில‌ங்களவை: ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி‌‌க்கு ஆதரவு- ராமதா‌ஸ் அ‌றி‌வி‌ப்பு!

வெள்ளி, 14 மார்ச் 2008 (09:50 IST)
''மா‌நில‌ங்களவை தேர்தலில் சீட் வழங்காதது மனவருத்தம் அளிப்பதாக இருந்தாலும், கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தோழமை கட்சிகளின் வெற்றிக்கு உதவுவோம்'' என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மா‌‌நில‌ங்களவை‌க்கு தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உ‌ள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (15ஆ‌ம் தே‌‌தி) கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி 5 இடங்களுக்கு போட்டியிடுகிறது. தி.மு.க. 2 இடங்களுக்கும், காங்கிரஸ் 2 இடங்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்‌ட் ஒரு இடத்துக்கும் போட்டியிடுகின்றன.

தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கும் ஒரு இடம் ஒதுக்குமாறு பா.ம.க. கேட்டது. ஆனால் அடுத்த முறை வாய்ப்பு தரப்படும் என்று தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கூறியதால் பா.ம.க. அதிருப்தி அடை‌ந்தது.

இதனால், பா.ம.க. தனித்துப் போட்டியிடுமா? அல்லது அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்குமா? அல்லது தேர்தலை புறக்கணிக்குமா? என்று பலவிதமான கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக பரபரப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த பரபரப்புகளுக்கு நேற்று ராமதா‌ஸ் முற்றுப்புள்ளி வை‌த்தா‌ர். தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பதாக அவ‌ர் அறிவித்தா‌ர் ''மா‌நில‌ங்களவை தேர்தலில் சீட் வழங்காதது மனவருத்தம் அளிப்பதாக இருந்தாலும், கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தோழமை கட்சிகளின் வெற்றிக்கு உதவுவோம்'' என்று பா.ம.க. ‌‌‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் தனது இறுதி முடிவை அறிவித்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்