தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்!
வியாழன், 13 மார்ச் 2008 (13:50 IST)
''வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை நீடிக்கும்'' என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்க கடலில் தமிழகம், இலங்கை கடலோரப் பகுதியின் தென்மேற்கு திசையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதற்கிடையே, இன்று காலை நிலவரப்படி இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆந்திராவுக்கும், தமிழகத்துக்கும் இடையில் நிலைகொண்டுள்ளதாகவும் இதனால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல்வேறு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும், ராமேஸ்வரம் பகுதியிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் கூறப்படுகிறது.