உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் பங்கீட்டுத்தொகை 15 விழுக்காடாக உயர்த்தப்படும். மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் மேம்பட அரசியல் நிர்ணய சபை உருவாக்க வேண்டும். இந்த ஆண்டு திட்டத்துக்கான நிதியில் 30 விழுக்காடு வேளாண்மை துறைக்கு ஒதுக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு பரூக்கி விசாரணை குழுவினர் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். அதிக வேலை வாய்ப்பை உருவாக்க சுய தொழில் மேம்பாட்டுக் குழு மற்றும் தொழில் வங்கி அமைக்கப்படும். வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்.
ஆரம்ப கல்விக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும். கல்வியை ஏற்கனவே இருந்தது போல் மாநில பட்டியலுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வேளாண்மை சார்ந்த தொழில்களுக்கு டீசல் மானியம் வழங்குவதுடன், விவசாயிகளுக்கு தேவைப்படும் சிறிய இயந்திரங்கள் மலிவு விலையில் விநியோகிக்கப்படும்.
ரேஷன் கடைகளில் முறைகேடுகள் செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும். வெளிநாட்டு மூலதனத்தை கவர்வதற்காக தனி வாரியம் அமைக்கப்படும். யார் மீதும் எந்த வரி உயர்வையும் இல்லாமல் வரிச்சுமை இல்லாமல் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
பயிர் பாதுகாப்புக்கென்று தனியான தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கப்பட்டு 20 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனும், பெரிய விவசாயிகளுக்கு 4 விழுக்காடு பயிர் கடன்களும் கொடுக்கப்படும்.
பயிர் காப்பீட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்பட்ட நியாயமான இழப்புக்கு உரிய காப்பீட்டு தொகை வழங்கப்படும். கரும்பு டன்னுக்கு 1880 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு 1000 ரூபாய் விலை கொடுக்கப்படும். கூட்டுறவுக்கு தனி தேர்தல் ஆணையம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த வரைவு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.