சிதம்பரத்தில் தினமும் தேவாரம் பாட சிவநெறியாளர்கள் முடிவு!
செவ்வாய், 11 மார்ச் 2008 (20:05 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றப்பல மேடையில் மார்ச் 12 முதல் தினமும் தேவாரம் பாட தமிழ் சிவநெறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிதம்பரம் நகரக் காவல் நிலையத்தில் நடந்த சமாதானக் கூட்டத்தில், "சிதம்பரம் நடராஜர் கோயில் சித்சபை திருச்சிற்றம்பல மேடையில் புதன்கிழமை (மார்ச் 12) முதல், முதல் கால பூஜை முடிந்தபின் 7.30 மணி முதல் 8.00 மணி வரை தமிழ் சிவநெறியாளர்கள் தேவாரம் பாடுவது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், சிற்றம்பல மேடையில் சிவநெறியாளர்கள் தேவாரம் பாடுவதற்கு புதன்கிழமை முதல் 3 நாட்கள் மட்டும் காவலர்கள் பாதுகாப்பு அளிப்பது. அதன்பிறகு பாட விரும்புவர்கள் தீட்சிதர்களை அணுகி முன்னறிவிப்பு செய்து பாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், காவல் ஆய்வாளர் ஏ.என்.ராமலிங்கம், உதவி ஆய்வாளர்கள் சீனிவாசன், சதீஷ், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி அமைப்பாளர்கள் கு.சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.