தி.மு.க. கூட்டணி செப்டம்பர் மாதம் உடையும்: கே.ஏ.செங்கோட்டையன்

திங்கள், 10 மார்ச் 2008 (15:10 IST)
தி.மு.க. கூட்டணி வரும் செப்டம்பர் மாதம் சுக்கு நூறாக உடைந்து விடும் என அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை துவக்க விழா கோபியில் நடந்தது. கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கே.சி.பழனிசாமி வரவேற்றார். அ.தி.மு.க. அமைப்பு செயலளார் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ பாசறைகளை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியது:

தொலைநோக்கு சிந்தனையில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை துவக்க அறிவுறுத்தியுள்ளார். சமூகத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்கள் வளர்ச்சிக்காக யாரை சந்திப்பது? யாரிடம் பேசுவது? என தெரியாமல், வழிநடத்த சரியான ஆள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் தேடலுக்கு அ.தி.மு.க.,வில் துவக்கப்பட்டுள்ள இந்த பாசறை சரியான முறையில் வழிகாட்டும். எனவே, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கட்சி நிர்வாகிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

தி.மு.க., கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், செப்டம்பர் மாதம் உடைந்து விடும். வரும் பாராளுமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வரமுடியும். எ‌ன்று அவ‌ர் பேசினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்