மாநிலங்களவை தேர்தல் : கட்சி மாறி ஓட்டுப் போட முடியாது- சட்டப்பேரவை செயலாளர்!
திங்கள், 10 மார்ச் 2008 (10:29 IST)
''மாநிலங்களவை தேர்தலில் யாரும் கட்சி மாறி ஓட்டுப் போட முடியாது'' என்று தமிழக சட்டப்பேரவை செயலாளர் எம்.செல்வராஜ் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை செயலாளரும், மாநிலங்களவை தேர்தல் அதிகாரியுமான எம்.செல்வராஜ் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களுக்கு புதிதாக 6 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையம், என்னை தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்துள்ளது. மாநிலங்களவை தேர்தல் சிறப்பாக நடைபெறும். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிப்பில் தேர்தல் நடைபெறும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் 2004-ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஓட்டுப் போடும்போது அவர் சார்ந்த கட்சி வேட்பாளருக்குத்தான் ஓட்டுப் போடுகிறாரா, இல்லையா என்று அக்கட்சியின் தேர்தல் ஏஜெண்டுக்கு சந்தேகம் ஏற்பட்டால், குறிப்பிட்ட உறுப்பினரை அழைத்து ஓட்டுச்சீட்டை காட்டச் சொல்லி பார்க்கலாம்.
தேர்தல் ஏஜெண்ட் விரும்பினால் குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்கள் ஓட்டுப் போடுவதையும் கவனிக்கலாம். இதனால், யாரும் கட்சி மாறி ஓட்டுப் போட முடியாது. இந்தத் தேர்தலில், பதிவாகும் செல்லத்தக்க ஓட்டுக்களின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படும். யூகத்தின் அடிப்படையில் தற்போது வேறு எதையும் கூற முடியாது என்று கூறினார் சட்டப் பேரவை செயலாளர் செல்வராஜ்.