இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திரைப்பட நடிகர் எம்.என்.நம்பியார் இல்லத்திற்கு கடந்த 7 ஆம் தேதி நான் சென்றபோது, பா.ஜ.க.வின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான ஜஸ்வந்த்சிங்கை அங்கே நான் சந்தித்ததாகவும், அவரிடம் நான் தற்போதுள்ள அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்" என்று கூறியுள்ளார்.
மேலும், "எனக்கு 60 வயது நிரம்பியதை முன்னிட்டு, பெரியவர் என்ற முறையில் எம்.என்.நம்பியாரிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காகத் தான் அவரது இல்லத்திற்கு நேரில் சென்றேனே தவிர, நான் யாரிடமும் அரசியல் குறித்து பேசுவதற்காக செல்லவில்லை.
இது எனது தனிப்பட்ட முறையிலான சந்திப்பு ஆகும். மேலும், நம்பியார் இல்லத்திற்கு நான் சென்றபோது, அங்கே அவரையும், அவரது குடும்பத்தினரையும் மட்டும் தான் சந்தித்தேன். பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்ததுபோல் அங்கு வேறு யாரையும் சந்திக்கவில்லை" என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
"அதைப் போலவே சோ.ராமசுவாமி இல்லத்திற்கு நான் சென்றபோது, பா.ஜ.க. மேலிடத் தலைவர் ஒருவரை அங்கே சந்தித்து பேசினேன் என்று சில பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளிலும் உண்மை இல்லை" என்று கூறியுள்ள ஜெயலலிதா, "கடந்த 7-ந் தேதி அன்று 7 பேரின் இல்லங்களுக்கு நான் அவர்களிடம் ஆசி பெற சென்றபோது, 7 இல்லங்களிலும் அந்த 7 பெரியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தான் சந்தித்தேனே தவிர, வேறு யாரையும் சந்திக்கவில்லை. இனி வரும் காலங்களில், இதுபோன்ற பொய்யான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.