இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 26ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. சார்பில் 2 இடங்களிலும், காங்கிரஸ் சார்பில் 2 இடங்களிலும் மற்றத் தோழமைக் கட்சிகளின் ஒத்துழைப்பை மேலும் உறுதிப் படுத்திக்கொண்டு இந்த 6 ஆண்டு கால இடைவெளியில் இதுவரை வாய்ப்பு பெறாத மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5வது இடத்திலே போட்டியிடுகின்ற வாய்ப்பினையும் உருவாக்கலாம் என தி.மு.க கருதுகிறது.
தோழமைக் கட்சிகளுக்கு வாய்ப்பே தராத கட்சி அல்ல தி.மு.க. 96 இடங்களைக் கொண்ட தி.மு.க. மேலும் 6 வாக்குகளை மட்டுமே பெற்றால்-சுலபமாக மூன்று இடங்களில் வென்றிட முடியு மென்றபோதிலும், தி.மு.க. இரண்டு இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு மேற்கொண்டு தன்னிடம் உள்ள 28 வாக்குகளை மற்றொரு தோழமைக் கட்சிக்கு வழங்கிக் கொண்டு வரும் வழக்கத்தை தொடர்ந்து இந்த முறையும் வரிசைப்படி பின் பற்றிட முன் வந்துள்ளது.
அந்த வரிசையில் தான் முதலில் பா.ம.க., அடுத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அதற்கடுத்து இப்போது காங்கிரஸ், வாய்ப்பு இருந்தால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒத்துழைப்பினை நல்கி வருகிறது. இந்த வரிசையில் பார்த்தால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு அடுத்து மீண்டும் பா.ம.க. தான் இடம் பெறும்.
பா.ம.க.விற்குக் கூட, தற்போது அவர்கள் கட்சியின் சார்பில் உறுப்பினராக உள்ள அன்புமணியின் பதவிக் காலம் முடியக்கூடிய சூழ்நிலை இருந்திருக்குமேயானால், அனைத்துத் தோழமைக் கட்சிகளையும் வலியுறுத்தி, தி.மு.க தனது முழு ஆதரவையும் அளித்து அவரது வெற்றிக்குத் தான் பாடுபட்டிருக்கும். அப்படிப்பட்ட நெருக்கடி எதுவும் பா.ம.க. விற்கு இப்போது இல்லை என்பதும், அவர்களது உறுப்பினர் இன்னும் இரண்டு ஆண்டு காலம் பதவியிலே நீடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார் என்பதும் தான் உண்மை.
பா.ம.க.விற்கு இரண்டு உறுப்பினர்கள் மாநிலங்கள வையில் இருக்கக்கூடாதா என்று கூட டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார். தி.மு.க அப்படியொன்றும் நினைக்கவில்லை. தற்போது இந்த அணிக்கு உள்ள வாக்குகளின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் தோழமைக்கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி, பா.ம.க. என்று மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் இருக்கும் இடங்களைப் பங்கிட்டுக்கொண்டு போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு இதிலே ஒரு சுமூகமான முடிவெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.