சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதி நியமனம்!
சனி, 8 மார்ச் 2008 (12:03 IST)
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர் ஆர்.சுப்பையாவை, புதிய நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது 45 நீதிபதிகள் உள்ளனர். இன்னும் 4 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப 3 வழக்கறிஞர்கள் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. இவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் ஆர்.சுப்பையாவை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்ட ஆவணத்தில் ஆர்.சுப்பையா இந்தியில் கையெழுத்திட்டார். அவ்வாறு கையெழுத்திட்ட ஆவணம் உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒருசில நாட்களில் குடியரசுத் தலைவரின் நியமன உத்தரவு உயர் நீதிமன்றத்துக்கு வந்து சேரும். இதன் பின்னர், இவர் நீதிபதியாக பதவி ஏற்பார். இவருக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
சென்னை அண்ணாநகரில் வசித்து வரும் ஆர்.சுப்பையா, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல்பாண்டியனின் மகன் ஆவார்.