சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக கூறிய ராமதாஸ், இப்போது 15ஆம் தேதி வரை கெடு வைத்திருக்கிறார். இது ராமதாஸ் குழப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது என்று கி.வீரமணி குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை மூலம் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர் படுகொலை அதிகரித்து வருகிறது. நேற்றுகூட விடுதலைப்புலிகளின் ஆதரவு எம்.பி.யான சிவனேசன் படுகொலை செய்யப்பட்டார். இலங்கை ராணுவத்திற்கு இந்தியா பயிற்சி அளிப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூட்டணி குறித்து பல நேரங்களில் வெவ்வேறு கருத்துக்களை கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு சமயம் தி.மு.க கூட்டணி தொடரும் என்கிறார். மற்றொரு சமயம் கூட்டணி தேர்தலோடு முடிந்துவிட்டது என்கிறார். கூட்டணியில் அவர் முழுமையாக இருக்கும் பட்சத்தில் உரிமையோடு மாநிலங்களவை சீட் கேட்கலாம்.
1996ல் இருந்து தங்களை தி.மு.க வஞ்சித்து வருவதாக ராமதாஸ் சொல்கிறார். 1996 ல் இருந்து அவர் எத்தனை முறை அணி மாறியிருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். சில தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி நீடிக்கும்; நூற்றுக்கு இருநூறு விழுக்காடு இது உறுதி என்றார். ஆனால் இப்போது 15ம் தேதி வரை கெடு வைத்திருக்கிறார். இது ராமதாஸ் குழுப்பத்தில் இருப்பதையே காட்டுகிறது.
கூட்டணியில் உள்ள எல்லோருக்கும் நியாயமாக நடந்து கொள்பவர் கருணாநிதி. எனவே ராமதாஸ் குற்றம்சாட்டுவது நியாயம் அல்ல. காங்கிரஸ் கூட்டணியில் நீடிப்பதாக ராமதாஸ் சொல்கிறார். தமிழ்நாட்டிலும் சரி, மத்தியிலும் சரி காங்கிரஸ் கூட்டணி என்று கிடையாது. ராமதாஸ் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார் என்று கி.வீரமணி குற்றம்சாற்றியுள்ளார்.