தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை மார்ச் 10ஆம் தேதி முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் கருணாநிதியின் அறிவுரைப்படி பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு முதல்வரின் அனுமதியுடன் தற்போது அறிவிக்கப்படுகிறது.
எருமை பாலின் விலையை லிட்டருக்கு ரூ.4ம், பசும் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டது. பால் விற்பனை விலையை பொறுத்தவரை சமன்படுத்திய பாலின் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போது சமன்படுத்திய பால் விற்கப்படும் ரூ.13.75லிருந்து ரூ.15.75 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
கொள்முதல் செய்யும் பாலின் தற்போதைய மொத்த சத்து 13 என்பது 12.5 ஆக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. பால் விற்பனை விலையை பொறுத்த வரை மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் மிக குறைவான விலைக்கு விற்பனை செய்யப் படுகிறது.
குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பால் லிட்டருக்கு ரூ.18 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 1 லிட்டர் பாலின் விலை ரூ.20 ஆக உள்ளது. கொள்முதல் விலையை அதிகரித்த போதிலும் விற்பனை விலையை அந்த அளவுக்கு அரசு உயர்த்த வில்லை என்று அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.