நடிகை ஜெயப்பிரதா திவால் ஆணை உயர் நீதிமன்றம் ரத்து!
வெள்ளி, 7 மார்ச் 2008 (15:24 IST)
சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி, தியேட்டர் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன்கள் முழுவதையும் நடிகை ஜெயப்பிரதா செலுத்தியதால் அவர் திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
நடிகை ஜெயப்பிரதா சென்னை மாநகராட்சிக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்ததை அடுத்து, அவருக்கு சொந்தமான திரையரங்குகளில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் சிற்றரசு, நடிகை ஜெயப்பிரதா ஏற்கனவே திவாலானவர் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி மாநகராட்சிக்கு கடிதம் எழுதினார்.
இதனையடுத்து தனது எம்.பி. பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் நடிகை ஜெயப்பிரதா,திவாலானவர் என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி சொத்துவரி பாக்கி, தியேட்டர் உரிமையாளர் ஒருவருக்கு ஜெயப்பிரதா கொடுக்க வேண்டிய கடன் பாக்கி ஆகியவற்றை முழுவதுமாக செலுத்திய பிறகுதான் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீண்டும் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை ஜெயப்பிரதா சார்பில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.19.20 லட்சத்துக்கு டி.டி. எடுக்கப்பட்டுள்ளது என்றும், சினிமா தியேட்டர் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகை வட்டியுடன் ரூ.6.5 லட்சத்துக்கு டிடி எடுக்கப்பட்டுள்ளது என்றும், வணிக வரித்துறைக்கு கேளிக்கை வரி ரூ.1,91,620 தொகைக்கு காலி காசோலை தருவதாகவும், அதை நீதிமன்றமே பூர்த்தி செய்யலாம் என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதி ராமசுப்பிரமணியன், நடிகை ஜெயப்பிரதா, அவரது தம்பி ராஜ்பாபு திவாலானவர்கள் என்ற அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.