இது குறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் அந்தோணி கூறுகையில், ராமேஸ்வரம் மீனவர் கிறிஸ்டியை சுட்டது சிறிலங்கா கடற்படை அல்ல என்று சிறிலங்கா தூதரகம் கூறுவது முற்றிலும் பொய். தாக்குதல் நடத்துவதும் பின்னர் மறுப்பதும் காலம் காலமாக இது தொடர்ந்து வருகிறது.
1992ஆம் ஆண்டு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சிறிலங்கா கடலோர காவல் படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 3 மீனவர்கள் பலியாயினர். 32 பேர் படுகாயம் அடைந்தனர். இதையும் சிறிலங்கா அரசு மறுக்கத்தான் செய்தது.
1983ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 86 படகுகளை சிறிலங்கா கடற்படையினர் அழித்து உள்ளனர். அதையும் மறுக்கத்தான் செய்தார்கள். இது பற்றி நடந்த விசாரணையின் முடிவில் சுனாமி தாக்குதலில் இழுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று கூறிவிட்டனர்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியான மண்டபம், தொண்டி, மல்லப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோட்டப்பட்டிணம், நாகை, கோடியக்கரை உள்ளிட்ட பகுதி மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதனை தடுக்க கச்சத்தீவை மீட்டு தரவேண்டும்.
நாம் அதனை சொந்தம் கொண்டாடிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்திய மீனவர்களை கச்சத்தீவு அருகே வரவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் பழி விடுதலைப்புலிகள் மீது போடப்படுகிறது. இது கண்டனத்துக்குரியது என்று ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தலைவர் அந்தோணி கூறினார்.