ரேஷன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது!

வெள்ளி, 7 மார்ச் 2008 (12:45 IST)
சேலத்தில் ரேஷன் அரிசி கடத்தியவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் முதலதேதி சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து 174 மூட்டை ரேஷன் அரிசி மல்லூர், பனமரத்துப்பட்டி, வீரபாண்டி ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்க கொண்டு செல்லப்பட்டது. ரேஷன் அரிசி ஏற்றி சென்ற லாரி மல்லூர் அருகே உள்ள ஏர்வாடி அரசம்பாளையம் பகுதியில் மற்றொரு லாரியை நிறுத்தி அதில் ரேஷன் அரிசி மூட்டை கடத்தப்பட்டது. இது கு‌றி‌த்து மாவட்ட வழங்கல் அதிகாரி சாம்பசிவத்துக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற காவலர்கள் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். ரேஷன் அரிசி கடத்திய லாரி உரிமையாளர் கணேசன், ஓட்டுனர் சக்திவேல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்த காரணமாக இருந்த வாணிப கிடங்கு பணியாளர் கோவிந்தராஜ், அரியம்பாளையம் ரேஷன் கடை விற்பனையாளர் நல்லுசாமி, வீரபாண்டி ரேஷன் கடை விற்பனையாளர் சேல்ஸ்மேன் தனபால், அக்கரப்பாளையம் ரேஷன் கடை விற்பனையாளர் வெங்கடாஜலம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த ரேஷன் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த அரிசி உரிமையாளர் மல்லூர் ஏர்வாடியை சேர்ந்த ஜெயக்குமாரை (43) காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது 174 மூட்டை ரேஷன் அரிசியும், வீட்டில் 25 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கிய இரண்டு வழக்கில் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்ததால், அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்