சிறையிலிருந்து விடுதலையான ஆறுமுகசாமி உள்ளிட்ட சிவனடியார்கள் குழுவினர் இன்று சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடினார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை உத்தரவின் படி தமிழில் தேவாரம், திருவாசகம் பாடச்சென்ற சிவனடியார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 11 தீட்சிதர்கள், சிவனடியார் ஆறுமுகசாமி, அவரது ஆதரவாளர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடப்படுவதை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின்பேரில் விடுதலையான ஆறுமுகசாமி உள்ளிட்ட சிவனடியார்கள் குழுவினர், தேவாரம் பாடுவதற்காக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர்.
பிரச்சனை ஏதும் இல்லாமல் இன்று இரண்டாவது நாளாக ஆறுமுகசாமி உள்ளிட்டோர் திருச்சிற்றம்பல மேடைக்கு சென்று தேவாரம் , திருவாசகம் பாடல்களை பாடினர். பாடி முடித்ததும் தீட்சிதர்கள் அணிவிக்கும் மாலை, மரியாதையை ஏற்க விருப்பம் இல்லாமல் உடனடியாக அங்கிருந்து ஆறுமுகசாமி உள்ளிட்டோர் சென்றுவிட்டனர்.