இலங்கையில் இருந்து 20 பேர் அகதிகளாக நேற்று தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்துசேர்ந்தனர்.
இலங்கையின் வவுனியாவில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த ஏழு குழந்தைகள், ஆறு பெண்கள் உட்பட 20 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.
இவர்களை தனுஷ்கோடி காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகர், மத்திய, மாநில புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர். பிறகு அவர்களை மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அகதியாக வந்துள்ள பகவதி (45) செய்தியாளர்களிடம் கூறிகையில், "தற்போது இலங்கை வவுனியா பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சோதனை என்ற பெயரில், இரவு நேரங்களில் வீடு வீடாகப் புகுந்து விடுதலைப் புலிகள் யாராவது இருக்கின்றனரா என ராணுவத்தினர் துன்புறுத்தி வருகின்றனர்.
வெளியே செல்லும் இளைஞர்களைப் பிடித்து புலிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி, ஒரு வாரம் கழித்து காயங்களுடன் அனுப்பி வைக்கின்றனர். குடும்பத்தினருக்கு எந்தத் தகவலும் தெரிவிப்பதில்லை. உணவுப் பொருள்களின் விலையும் அதிகமாக உள்ளதால், வேறு வழியின்றி இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளோம் என்றார்.