வருவோர் போவோர் எல்லாம் எம்.ஜி.ஆரின் வாரிசு ஆகிவிட முடியாது என்று லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்தரிடம், எம்.ஜி.ஆரின் வாரிசு நாங்கள் என்று ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் வருகிறார்களே? என்று கேட்டதற்கு, "அன்றில் இருந்து இன்று வரை எம்.ஜி.ஆர். இறந்ததற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியை தற்காத்து காப்பாற்றி துணிவுடன் நடத்தி வரும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் எம்.ஜி.ஆரின் வாரிசாக இருக்க முடியும். அவர் ஒரு ரியல் ஃபைட்டர். சிறிது காலம் எம்.ஜி.ஆரின் புகழை பாடாமல் மறந்து இருக்கலாம். அதற்காக அவரை வாரிசு இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.
ஒருவர் நான் எம்.ஜி.ஆர். ஆட்சி அமைப்பேன் என்கிறார். மற்றொருவர் காமராஜர் ஆட்சி அமைப்பேன் என்கிறார். இது வேடிக்கையாக உள்ளது. வருவோர் போவோர் எல்லாம் எம்.ஜி.ஆரின் வாரிசு ஆகிவிட முடியாது. மற்றவர்களை போல கறுப்பு எம்.ஜி.ஆர். என்றும், தாடி வைத்த எம்.ஜி.ஆர். என்றும் கூறிக் கொள்ளும் பழக்கம் எனக்கு கிடையாது" என்றார்.
அனைத்து கட்சிகளும் தனியாக போட்டியிட வேண்டும் என்று விஜயகாந்த் கூறி உள்ளாரே? என்று கேட்டதற்கு, "விஜயகாந்திற்கு கருத்து சுதந்திரம் உள்ளதால் அவர் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளுக்கு சவால் விடுகிறார். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையிலேயே விஜயகாந்தால் நீடிக்க முடியுமா?" என்று கேட்டார் ராஜேந்தர்.
மேலும், "நடிப்பதில் இருந்து அரசியலுக்கு வந்த எல்லோரும் ஆட்சியை பிடிக்க முடியாது. அரிதாரம் பூசி விட்டால் அரியணை ஏறி விட முடியாது. எங்களுக்கு என்று நல்ல லட்சியம் உள்ளது. ஆனால் சிலரே அரசியல் கட்சிகள் தொடங்கிய அடுத்த நாளே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். இதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறினார்.