அனைத்து தரப்பினரும் பாராட்டும் நிதிநிலை அறிக்கை : கருணாநிதி!
வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (16:52 IST)
மத்திய அரசின் 2008-09 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கும் விதமாக உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்!
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன் தொகை 60 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய உதவியதற்காகவும், அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் 2008-09 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை அமைய உழைத்த ஐக்கிய முற்போக்கு கூட்ணி தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கும் கருணாநிதி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கடனை தமிழகத்தைப் போன்று நாடு முழுவதும் இரத்து செய்ய வேண்டும் என்று தாம் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம், இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ ஊக்கமாக இருந்திருக்கலாம் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் கடல் நீரைக் குடீநீராக்கும் திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.300 கோடி, ஈரோட்டில் மின்தறி தொழிற்சாலை அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கியது மற்றும் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, சாலை, குடிநீர் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகள் வரவேற்கத்தக்கதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் குறைவான வருவாய் உள்ளவர்கள், அரசு ஊழியர்கள் பயனடையும் வகையில் வருமான வரியில் விலக்கு அளித்துள்ளதையும், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், சிறுப்பான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோரும் பயனடையும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.