மயிலை கபாலீசுவரர் கோயிலில் நாளை குடமுழுக்கு!
புதன், 27 பிப்ரவரி 2008 (18:20 IST)
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருக்கோயில் ராஜகோபுர குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. 3வது நாளான இன்று மாலை 6 மணிக்கு மூன்றாவது கால வேள்வி வழிபாடு தீபாராதனை நடைபெறுகிறது.
நாளை காலை 5.30 மணிக்கு நான்காவது கால வேள்வி வழிபாடும், 7.30 மணிக்கு யாகசாலை வேள்வி நிறைவு மற்றும் கலசம் புறப்பாடும் நடைபெறும். காலை 9.05 மணிக்கு ராஜகோபுர குடமுழுக்கு நடக்கிறது. இதைத்தொடர்ந்து அருள்மிகு கபாலீசுவரருக்கு சிறப்பு அபிஷேகம், புனித நன்னீராட்டு, தீபாராதனை நடைபெறும்.
இந்த குடமுழுக்கு விழாவில் மத்திய அமைச்சர் டி.அர்.பாலு, தமிழக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கபாலீசுவரர் திருக்கோயில் துணை ஆணையர் ம.தேவேந்திரன், அறங்காவலர் குழுத்தலைவர் நல்லி என்.குப்புசாமி செட்டியார், அறங்காவலர்கள் விஜயா தாயன்பன், பி.ஆர்.தமிழரசன், பொழிச்சலூர் வைத்தியநாத முதலியார் ஆகியோர் செய்துள்ளனர்.