வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் வரலாற்று சிறப்புமிக்க 2008-09 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதற்காக எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். முதல் முறையாக பயணிகள் கட்டணமும், சரக்கு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் வரலாற்றில் தற்போதுதான் முதல் முறையாக பயணிகளுக்கு விரிவான சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்பது எனது கருத்தாகும்.
தமிழகத்தை பொறுத்தவரை, மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் 6 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதுடன், 9 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பாக கடந்த 21ஆம் தேதி தங்களுக்கும், தங்களது அமைச்சரவை சகாக்களுக்கும், தமிழகத்தின் 5 புதிய ரயில் திட்டங்கள் தொடர்பாக கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்காக தங்களுக்கும், மத்திய அமைச்சரவைக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த அனைத்து திட்டங்களும் தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழக மக்கள் சார்பாக தங்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
லாலுவுக்கும் பாராட்டு கடிதம்!
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு முதலமைச்சர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், விழுப்புரம், திண்டுக்கல் இடையே 2-வது பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மதுரை- போடிநாயக்கனூர் அகலப்பாதை அமைக்கவும், ஈரோடு, பழனி, சென்னை, புதுச்சேரி, கடலூர், அத்திபட்டு புத்தூர் மற்றும் திருவள்ளூர், அரக்கோணம் ஆகிய இடங்களில் புதிய பாதை அமைக்க ஒப்புதல் அளித்திருப்பதற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ரயில்வே துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலுவுக்கும் முதலமைச்சர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.