தவறான முறை‌யி‌ல் சுனாமி வீடுகளை வா‌ங்‌கினா‌‌ல் 6 மாத‌ம் ‌சிறை!

புதன், 27 பிப்ரவரி 2008 (12:10 IST)
''தவறான முறையில் சுனா‌மி வீடுகளைப் பெற்றவர், பெற முயற்சிப்பவர்கள் 6 மாதம் தண்டனைக்கு உள்ளாவதுடன் அபராதமும் செலுத்த நேரிடும்'' எ‌ன்று தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இதகு‌றி‌த்ததமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் குடி சைப் பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களுக்காக இலவசமாகவும், சுலப தவணை முறையிலும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர வெள்ளம், தீ விபத்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது சில சமூக விரோதிகள் குடிசைப் பகுதி வாழ் ஏழை, எளிய மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை முறையாக பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு கிடைக்காமல் செய்வதுடன் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாரிய விதிகளுக்கு புறம்பாக வீடுகளை பெறுவதற்கு முயற்சி செய்வது கண்டறியப்பட்டுள்ளது.

சில ஒதுக்கீடுதாரர்களும், ஒதுக்கீடு பெற்ற பின் இக்குடியிருப்புகளை மேல் வாடகை மற்றும் குத்தகைக்கு விடுதல், விற்பனை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இச்செயல்கள் அனைத்தும் வாரிய சட்டத்திற்கும் விதிமுறைகளுக்கும், ஒதுக்கீடு ஆணை நிபந்தனைகளுக்கும் புறம்பானவை. இவ்வாறு தவறான முறையில் வீடுகளைப் பெற்றவர், பெற முயற்சிப்பவர்கள் 6 மாதம் தண்டனைக்கு உள்ளாவதுடன் அபராதமும் செலுத்த நேரிடும்.

தவறான முறையில் வீடுகளை வாங்கியவர்கள், குடியிருப்புகளில் மேல் வாடகைக்கு, குத்தகைக்கு இருப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் அவர்கள் அக்குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுவது மட்டுமின்றி வருங்காலத்தில் வாரியத்தின் அனைத்து திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெறும் தகுதியையும் இழப்பார்கள் எ‌ன்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்