10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கூடுதலாக 10 நிமிடம் கல்வித்துறை அறிவிப்பு!
செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (17:16 IST)
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத கூடுதலாக 10 நிமிடம் அதிகரித்து தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் தற்போது பிளஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 3 மணி நேரத் தேர்வுகளும், 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி.) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 2.30 மணி நேர தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்கள் மேல்நிலைப் கல்வி பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதை நிர்ணயிக்கின்றன. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மேல்நிலை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே மருத்துவம், பொறியியல் பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இவ்விரு தேர்வுகளும் மாணவர்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், இத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு எழுத ஆரம்பிக்கும் முன் ஒருவித மன இறுக்கத்துக்கு ஆளாவதால் அந்த பதற்றத்தில் வினாக்களை சரியாகப் படிக்காமலும், புரிந்து கொள்ளாமலும் தவறான விடை எழுதும் நிலை ஏற்படுகிறது. வினாத்தாள்களை வாசிப்பதற்கு கூடுதலாக கால அவகாசம் அளித்தால் மாணவர்கள் மன உளைச்சல் இன்றி தேர்வுகளை சரியாக எழுத இயலும் என்ற கோரிக்கை மாணவர்களிடமிருந்தும், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியிலும் இருந்தும் அரசுக்கு தொடர்ந்து வந்தது.
இக்கோரிக்கையினை பரிசீலித்த முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் சுமார் 16 லட்சம் மாணவ- மாணவிகள் உடனடியாக பயன்பெறும் வகையில் இக்கோரிக்கையினை ஏற்று இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த ஆணையிட்டுள்ளார்கள்.
எனவே, வினாத்தாள்களை காலை 10 மணிக்கு வழங்கி விட்டு வினாக்களைப் படிப்பதற்கு கூடுதலாக 10 நிமிட அவகாசம் அளித்து, பின்னர் காலை 10.10 மணியளவில் விடைத்தாட்களை வழங்கி தேர்வு நடத்தலாம் என்றும், இந்த கூடுதல் 10 நிமிடங்களை ஒருமுகப்படுத்தும் நேரமாக கருதலாம் என்றும் அரசு முடிவெடுத்து 2008 மார்ச் மாதத்தில் துவங்கும் தேர்வுகளில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த ஆணையிடுகிறது. இதனை நடைமுறைப்படுத்துவதால் நிர்ணயிக்கப்பட்ட தேர்வின் கால அளவுடன் கூடுதலாக 10 நிமிடம் மாணவர்களுக்கு கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.