ரூ.1330 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.1330 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகள் பயன்பெறும்.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 10 மணிக்கு தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் ரூ.28.31 கோடி செலவில் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.84.18 கோடி மதிப்பிலான 6,630 பணிகளை தொடங்கி வைத்தும், 20,463 பயனாளிகளுக்கு ரூ.15.04 கோடி மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளையும் வழங்கி முதலமைச்சர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
விழாவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுகவனம் எம்.பி., கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ்பாபு, தர்மபுரி கலெக்டர் அமுதா, தலைமைச் செயலாளர் திரிபாதி, எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன், முல்லைவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் கிருஷ்ணகிரியில் விழா
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி கிருஷ்ணகிரி சென்றார். அங்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறும் புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா, தகவல் தொழில்நுட்ப பூங்கா அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவுக்கும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
அமைச்சர்கள் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், துரைமுருகன், பெரியசாமி, தலைமை செயலாளர் திரிபாதி, சிறப்பு ஆணையாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சக்தி காந்தபாய், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சந்தோஷ்பாபு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.