‌விஜயகா‌ந்து‌க்கு கருணா‌நி‌தி தா‌க்‌கீது

ஞாயிறு, 24 பிப்ரவரி 2008 (13:54 IST)
தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக இன்னும் 2 நாட்களில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என்று விஜயகாந்திற்கு முதலமைச்சர் கருணாநிதி சார்பில் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜயகாந்த், முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இந்த பேட்டி குமுதம் நாளிதழில் வெளியாகியுள்ளது.

இந்த பேட்டியில் விஜயகாந்த், கருணாநிதியைப் பற்றி ஆதாரமற்ற, அவதூறான செய்திகளைக் கூறியுள்ளதாகக் கூறி கருணாநிதி விஜயகாந்திற்கு தாக்கீது அனுப்பியுள்ளார்.

மேலும் குமுரம் வார இதழ் ஆசிரியருக்கும், வெளியீட்டாளருக்கும் தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

விஜயகாந்திற்கு அனுப்பப்பட்டுள்ள தாக்கீதில், முதலமைச்சர் கருணாநிதி சொல்லாததை எல்லாம் திரித்துப் பேசியதற்காக இன்னும் 2 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். உங்கள்து மன்னிப்பு தகவல் அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் வர வேண்டும். அதோடு குமுதம் இதழின் அடுத்த வார இதழிலும் உங்களது மன்னிப்பு இடம் பெற வேண்டும்.

இல்லையெனில் உங்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட்டு, அதன் படி நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எதிர்காலத்திலும் முதலமைச்சர் கருணாநிதி பற்றி எந்த அடிப்படை, ஆதாரமும் அற்ற தகவல்களையும், கருத்துக்களையும் நீங்கள் பேசக் கூடாது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த தாக்கீதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்