சிறுதொழில் வளர்ச்சிக்கு தனிக்கொள்கை - கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்தா‌ர்

சனி, 23 பிப்ரவரி 2008 (10:56 IST)
தமிழக‌த்‌தி‌ல் சிறு தொழில் வளர்ச்சிக்கான தனிக் கொள்கையை முதலமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். இதன்மூலம் 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தொழில் வளர்ச்சிக்கான உயர்மட்டக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையி‌ல்"குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இ‌ந்த கொள்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் போட்டியிடும் திறமையை அதிகரிக்கச் செய்து, அவற்றின் செயல் திறனை படிப்படியாக மேம்படுத்துதல். மதிப்பு கூடுதலை அதிகப்படுத்தவும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைத்திடவும், வேளாண்சார்ந்த தொழில்களை ஊக்குவித்தல்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 10 விழுக்காட்டுக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயம் செய்தல். 11-வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 10 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்.

இதில் மாநிலத்தில் முதன்முறையாக குறு உற்பத்தி நிறுவனங்களுக்காக அடுக்குமாடி தொழிற்பேட்டைகள் உருவாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்பேட்டைகளில் தொழிற்கூடங்கள் அமைக்க விதிகள் தளர்த்தப்பட்டு தரைபரப்பளவு குறியீடு 1.5 முதல் 1.75 வரையிலும் அடுக்குமாடி தொழிற்பேட்டைகள் அமைக்க அதிகபட்சமாக 2.5 வரையிலும் அனுமதிக்கப்படும்.

மாநிலத்தில் முதன்முறையாக தனியார் துறை மூலம் தொழிற்பேட்டைகளை உருவாக்குவதற்கு 20 சதவீதம், அதிகபட்சமாக தொழிற்பேட்டை ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை, அடிப்படை கட்டமைப்பு மானியமாக வழங்கப்படும்.

சிப்காட் உருவாக்கும் தொழிற்பேட்டைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 20 சதவீதமும், சிட்கோ மேம்படுத்தும் தொழிற்பேட்டைகளில் 30 சதவீதமும் நிலப்பரப்பு ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழிற்பேட்டைகள் மற்றும் பின் தங்கிய வட்டாரங்களில் அமைக்கப்படும் குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு முத்திரைக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

15 சதவீதம் மூலதன மானியம் (இயந்திரம் மற்றும் தளவாடங்களின் மதிப்பில்), முதல் 3 ஆண்டுகளுக்கு 20 சதவிகிதம் குறைந்த அழுத்த மின் மானியம். முதல் 6 ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்பு கூட்டுவரிக்கு ஈடான மானியம் வழங்கப்படும்

குறைந்த பட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு 5 சதவீதம் வேலை வாய்ப்பு பெருக்க மானியம் வழங்கப்படும்.

மாநிலத்தில் முதன்முறையாக பெண்கள், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோர், மற்றும் அரவாணிகள் தொழில் முனைவோராக உள்ள நிறுவனங்களுக்கு 5 சதவீதம் கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்.

சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு அதற்காக நிறுவப்பட்டுள்ள இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் கூடுதல் மூலதன மானியம் வழங்கப்படும்..

முதல் 3 ஆண்டுகளுக்கு 20 சதவீதம் குறைந்த அழுத்த மின் மானியம். இந்த மானியச் சலுகைகள் மாநிலத்திலுள்ள அனைத்து 385 வட்டாரங்களில் அமைக்கப்படும் வேளாண் சார் தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் எப்பகுதியிலும் அமைக்கப்படும் மின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், மருந்து பொருட்கள், சூரிய சக்தி உபகரணங்கள், ஏற்றுமதிக்கான தங்கம், வைர நகைகள், மாசுக்கட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டு பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு ஆகிய சிறப்பு தொழில் இனங்களுக்கு 15 சதவீதம் சிறப்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.

தொழில் நுட்ப மேம்பாடு மற்றும் நவீன படுத்தலுக்காக வாங்கப்படும் கடன் தொகையில் 3 சதவீதம் அளவுக்கு வட்டி மானியமாக வழங்கப்படும்.

காப்புரிமை சான்று மற்றும் வணிக குறியீடு சான்று பெற ஆகும் செலவில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு முயற்சி வாயிலாக தொழில் குழுமங்கள் மற்றும் சிறு கருவி மையங்கள் அமைக்க அரசு உதவும்.

தூய்மையான மற்றும் சக்தித் திறனுள்ள தொழில் நுட்பங்களை ஏற்படுத்தல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் நுட்பங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஒரு தொழில் வளர்ச்சி நிதியம் அமைக்கப்படும்.

நவீன உற்பத்தி உத்திகள் மற்றும் வடிவமைப்பு மேம்பாடு ஆகியவற்றை புகுத்தும் நோக்குடன் தொழில் நுட்ப மற்றும் வணிக சேவை வசதி வளர்ப்பகங்கள் அமைக்கப்படும்.

தொழிலாளர்களின் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை செயல்படுத்த ஆகும் பயிற்சி கட்டண செலவில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

குறு மற்றும் சிறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் உற்பத்திப் பொருட்களுக்கு 15 சதவீதம் விலை முன்னுரிமை அளிக்கப்படும். மாநில அரசு அவ்வப்போது அறிவிக்கை வெளியிடும் உற்பத்திப் பொருட்களுக்கு கொள்முதல் முன்னுரிமை வழங்கப்படும்.

பிணை வைப்புத் தொகை செலுத்துவதில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு விதிவிலக்குச் சலுகை தொடரும். தொழில் நிறுவன சங்கங்கள் தமிழ்நாட்டிலோ அல்லது வேறு மாநிலத்திலோ பொருட்காட்சிகள் நடத்துவதற்கு ஆகும் செலவில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

தொழில் முனைவோரின் குழுமங்கள் தங்களது உற்பத்திப் பொருளை பொதுவான பெயர் அல்லது வணிகச் சின்னத்தில் விற்பனை செய்ய ஆதரவு அளிக்கப்படும். தொழில் தொடங்க பொது விண்ணப்பப்படிவம் மூலம் அரசு துறைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை அமலாக்கப்படும்.

சட்டப் பூர்வமாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டிய விவரங்களை சமர்ப்பிக்கும் வழிமுறைகள் எளிதாக்கப்படும்.

தொழிற்சாலைகளை துவங்குவதற்கான வழிமுறைகளை விரைவுபடுத்தும் நோக்குடன் ஒற்றைச் சாளர தீர்வுச் சட்டம் அரசால் கொண்டுவரப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை சேர்ந்தாய்வு மற்றும் பரிந்துரை செய்வதற்காக குறு சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கான வாரியம் அமைக்கப்படும்.

கொள்கை செயல்படுத்துதலை கண்காணிக்கும் நோக்குடன் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் ஒரு அதிகாரம் பெற்ற குழு ஏற்படுத்தப்படும்.

தொழில் மற்றும் வணிகத்துறையின் நிர்வாக அமைப்பு மறு சீரமைக்கப்படும். நலிவுற்ற தொழில் நிறுவனங்களை புனரமைப்பதற்கான சலுகை திட்டங்களுடன் கூடிய விரிவான கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனிக் கொள்கை அரசால் அறிவிக்கப்படும்.

இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மானியம் மற்றும் சலுகைத் திட்டங்கள் சிறுதொழில்களுக்கான கொள்கை வகுக்கப்படும் எனத் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த தினத்தில் இருந்து (1.8.2006) தொழில் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இக்கொள்கை வெளியிடப்படுகின்ற நாளான நேற்று முதல் (22-02-08) உற்பத்தியைத் தொடங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எ‌ன்று அதில் கூறப்பட்டுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்