சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தொடர் போராட்டம்: தா.பாண்டியன்!
வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (11:33 IST)
''சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தொடர் போராட்டம் நடத்துவோம்'' என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் பல இடங்களில் கனிம பொருட்கள் வெட்டி எடுக்கும் உரிமை தனியாருக்கு விடப்பட்டு உள்ளது. அவைகளை அரசுடமையாக்கவேண்டும். கூட்டுறவுத்துறை நசிந்து வருவதை தடுக்க கூட்டுறவு அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் கல்வித்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்பவேண்டும். மின்சாரம் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசு உரிமம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியல்களை அரசு வெளியிட வேண்டும். இதனால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுக்கமுடியும்.
சேது சமுத்திர திட்டப்பணிகள் 60 விழுக்காடு முடிவடைந்து விட்டது. ராமர் பாலம் என்று கூறப்படும் மணல் திட்டு பகுதியில் வேலை செய்வதற்குத்தான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால் மத்திய அரசு அந்த திட்டத்தை கைவிடுவது போல பேசிவருகிறது.
தமிழ்நாட்டின் முக்கிய பொருளாதார வளத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுவரும் சேது சமுத்திர திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படாதது குறித்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் மந்திரிகளோ, காங்கிரஸ் தலைவர்களோ எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
டெல்லியில் மத்திய மந்திரி அம்பிகா சோனி போன்றோர் ஏதோ புதிதாக திட்டமிடுவது போல் மக்களின் கருத்தை கேட்கவேண்டும் என்றெல்லாம் பேசி வருகிறார்கள். சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தொடர் போராட்டம் நடத்தும் இயக்கம் பற்றி வருகிற 23ஆம் தேதி தூத்துக்குக்குடியில் அறிவிக்க உள்ளோம் என்று தா.பாண்டியன் கூறினார்.