தமிழக சாலைப் பணிகளுக்கு ரூ.5 கோடி : ம‌த்‌திய அரசு அனுமதி!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (19:01 IST)
தமிழ்நாட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் சிறிய பாலங்களை சீரமைக்கவும் ரூ.5.3 கோடியை ம‌த்‌திய அரசு ஒது‌க்‌கியு‌ள்ளது.

தேசிய நெடுஞ்சாலை எண்.208-ல் புதுப்பட்டிக்கும் திருமங்கலம் சாலைக்கும் இடையேயான பகுதியை வலுப்படுத்தும் பணிக்கு ரூ.2.7077 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களை இணைக்கும் இந்த முக்கிய தேசிய நெடுஞ்சாலை தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பல முக்கிய நகரங்கள் வழியாக அமைந்துள்ளது.

குற்றாலம், மதுரை ஆகிய இரண்டு முக்கிய சுற்றுலா மையங்களையும் இந்த சாலை இணைக்கிறது. கடந்த பருவ மழை காலத்தின் போது இந்த சாலை மோசமாக சேதமடைந்தது. எனவே இந்த சாலை பகுதியை பழுது நீக்குவது மிகவும் அவசியமாகியுள்ளது.

அதே சாலை‌யி‌ல் ஐந்து சிறிய பாலங்களை சீரமைப்பதற்காக ரூ.2.6212 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. சேத்தூருக்கும் ராஜபாளையத்திற்கும் இடையே உள்ள சாலை பகுதியில் இந்த ஐந்து சிறிய பாலங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை மோசமான நிலையில் உள்ளன.

இந்த பாலங்களின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அளவுகோலுக்கு ஏற்ப இந்த பாலங்களை சீரமைக்க அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்