இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியின் கீழ் 19 உருது தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 2356 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் 36 உருது மொழி வழி ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.
அமைச்சர் மு.க. ஸ்டாலின் 1997ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக இருந்த போது மாநகராட்சி உருது பள்ளிகளுக்கு 27 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். கடந்த கால அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி உருது பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.
தற்போது சென்னை மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் உருது மொழி வழி கல்வி பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி நலனை உயர்த்திடும் வகையில் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 23 உருதுமொழி வழி இடைநிலை ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகம் வழியாக இனவாரி சுழற்சியின் அடிப்படையில் ரூ.4500-125-7000 என்ற ஊதிய விகிதத்தில் உடனடியாக நிரப்புவதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, இன்று தலைமைச் செயலகத்தில் சென்னை மாநகராட்சி உருது பள்ளிகளுக்கு 23 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக அரசின் ஆணைப்படி சென்னை மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 75 தமிழ்வழி இடைநிலை ஆசிரியர்கள், 8 உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை வாய்ப்பகம் வழியாக இனவாரி சுழற்சியின் அடிப்படையில் உடனடியாக நிரப்புவதற்கும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.