சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லதத்தில் முதலமைச்சர் கருணாநிதியை இன்று பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டில் சிற்றூர், பேரூர், நகரம் அனைத்து இடங்களிலும் பேனர், கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. இது தடுக்க வேண்டும். நிதி விளம்பர போர்டுகளை கண்டித்து முதலமைச்சர் கருணாநிதி அறிக்கையை வெளியிட்டார். அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை வரை பிப்ரவரி 26ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடத்த உள்ள மது ஒழிப்ப பிரசார இயக்கத்தை பற்றியும் முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன். மதுக்கடைகளை படிப்படியாகவாவது குறைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன்.
சமீபத்தில் உச்ச நீதிமன்றம், ஒன்று முதல் 10ஆம் வகுப்புவரை தமிழை கட்டாய பாடமாக படிக்க உத்தரவிட்டதற்கு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தேன். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் 18 மொழிகள் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
விரைவில் வரப்போகும் தமிழக பட்ஜெட் குறித்து சில யோசனைகளை தெரிவித்தேன். பெண்கள், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். அரசியல் பற்றி பேசவில்லை. தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி தொடரும் என்று ராமதாஸ் கூறினார்.