வாழ்நாள் முழுதும் சிறையிருந்தாலும் கொள்கையை மாற்ற மாட்டேன்: திருமாவளவன்!
வியாழன், 21 பிப்ரவரி 2008 (15:05 IST)
''வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தால் எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டேன். உலக தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தந்தே தீர்வோம்'' என்று தொல். திருமாவளவன் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த நிராமணியில் நடந்த அம்பேத்கர் விழாவில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கர். இந்தியாவில் வெவ்வேறு தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினாலும், அவர்களுக்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் புரியவில்லை. அம்பேத்கர் தான் இதை வெளியே கொண்டு வந்தார்.
திரைப்படத்தில் பாய்ந்து பாய்ந்து அடிப்பவர்களால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியுமா? ஒரு பண்பாட்டு புரட்சியையே செய்தார் அம்பேத்கர். விடுதலை சிறுத்தைகள் இயக்கம் தான் ஒட்டுமொத்த தமிழர்களுக்காக பாடுபடும் இயக்கம். பெண்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அது தான் சமுதாயத்தின் வித்து. சினிமா நடிகர்களை நம்பி தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் செல்லக் கூடாது. ஏமாறவும் கூடாது.
ஜெயலலிதா என்னை சிறை வைக்க வேண்டும் என்கிறார். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்தால் எனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டேன். உலக தமிழர்களுக்கு தார்மீக ஆதரவு தந்தே தீர்வோம் என்று திருமாவளவன் கூறினார்.