விரை‌வி‌ல் மகளிர் இடஒதுக்கீடு கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்!

வியாழன், 21 பிப்ரவரி 2008 (10:44 IST)
''முதல்வர் கருணாநிதி தொடர்ந்து குரல் கொடுப்பதால் நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33‌விழு‌க்காடு இடஒதுக்கீடு விரைவில் கிடைக்கும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌‌ர்.

மதுரையில் நகர்ப்புற சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா‌வி‌ல் உ‌ள்ளா‌‌ட்‌சி‌த் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை‌யி‌ல்,
தேர்தல் வாக்குறுதியை சரியாக நிறைவேற்றுவது தி.ு.க மட்டுமே. கடந்த தேர்தலில் வழங்கிய உறுதிமொழிகளையும், வாக்குறுதிகளையும் தி.ு.க அரசு பதவியேற்ற நாளிலிருந்து முழுமையாக நிறைவேற்றி வருகிறது.

பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதையுடன் சொந்தக்காலில் நிற்கும் சக்தி பெறவேண்டும் என்பதற்காக 1989ல் தர்மபுரியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி மகளிர் சுயஉதவிக்குழுவை முதலில் தொடங்கி வைத்தார். மாநிலத்தில் நகரப்பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் சுழல் நிதி வழங்க கடந்த ஆண்டில் ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்தியாவிலேயே சுயஉதவி குழுக்களுக்கு அதிக நிதி வழங்குவது தமிழகம்தான். சிறந்த சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருதும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 ‌விழு‌க்காடு இடஒதுக்கீடு வழங்கியது கருணாநிதி தான். அதன் விளைவாக உள்ளாட்சிகளில் 50 ‌விழு‌க்காடு வரை பெண்கள் பதவி வகிக்கின்றனர்.

நாடாளுமன்றம், சட்டப் பேரவையிலும் மகளிருக்கு 33 ‌விழு‌க்காடு இடஒதுக்கீடு வழங்க முதல்வர் கருணாநிதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் குரல் கொடுப்பதால் சட்டசபை, நாடாளுமன்றத்தில் 33 ‌விழு‌க்காடு இட ஒதுக்கீடு வந்தே தீரும். பெண்கள் எல்லா துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகின்றனர். இதனால், ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை எ‌ன்று மு.க.ஸ்டாலின் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்