முதல்முறையாக மாடு, குதிரைகளுக்கு மயக்கம் கொடுக்கும் கருவி!
வியாழன், 21 பிப்ரவரி 2008 (10:39 IST)
இந்தியாவிலேயே முதல்முறையாக பெரிய பிராணிகளுக்கு மயக்க மருந்து செலுத்தும் நவீன கருவி நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மாடு, குதிரை போன்ற பெரிய விலங்குகளுக்கு மட்டும் ஆண்டுக்கு 100 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரிய பிராணிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கும்போது உடலில் எந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அந்த பகுதியை மட்டும் தற்காலிகமாக மறத்து போகச்செய்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது பிராணிகள் ஆடாமல் இருக்க, அதை கயிற்றில் கட்டியும், 4 பேர் பிடித்துக்கொள்ளவும் வேண்டும்.
இந்த சிரமங்களை தவிர்க்கும் வகையில், பெரிய பிராணிகளுக்கு எளிதில் மயக்க மருந்து அளிக்க, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன கருவியை அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகம் மயக்க மருந்தியல் நிபுணர் ஜார்ஜ் பொகார்டு இலவசமாக வழங்கியுள்ளார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் கூறினார்.