குளித்தலை: ம.தி.மு.க.- தி.மு.க. தொண்டர்கள் மோதல்!
செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (12:23 IST)
குளித்தலையில் நேற்று இரவு நடைபெற்ற ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தின் போது அதன் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத், குளித்தலை நகராட்சி துணைத் தலைவர் பல்லவிராஜா, ம.தி.மு.க. தொண்டர்கள் 15 பேர் மீது தி.மு.க. தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அவர்கள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து ம.தி.மு.க. தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் பற்றி ம.தி.மு.க.வினர் கூறுகையில், பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த போது மேடையின் பின்புறத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் திடீரென மேடையில் ஏறி அப்போது பேசிக் கொண்டிருந்த கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் நடத்தியதோடு மேடையில் அமர்ந்திருந்த அனைவரையும் ஆயுதங்களால் தாக்கியதாக கூறினர்.
பின்னர் மேடையில் இருந்து இறங்கிய அவர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், அருகிலிருந்த கடைகளை அடித்து நொறுக்கியதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, காயமடைந்த நாஞ்சில் சம்பத் உடனடியாக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அப்போது அவர் கூறுகையில், இந்த நிகழ்வு தமிழகத்தில் ம.தி.மு.க.வை அளிக்க ஆளும் கட்சி திட்டமிட்டு நடத்திய சதிச்செயல் என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக , குளித்தலை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.